தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்யும் குழுக்கள் ; ஜனாதிபதி அநுர சூளுரை இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை ஒடுக்குவதற்கு, முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் பிரச்சினைகள் நிலவுகின்றன.
அண்மையில் நாடாளுமன்றத்தில் அமைச்சு சார் ஆலோசனைக்குழு கூட்டமொன்றில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நான் தயார் எனக் கூறினேன்.இந்த விகாரை தொடர்பான பிரச்சினையை வைத்துக் கொண்டு வடக்கிலும் தெற்கிலும் அரசியல் செய்து வருகின்ற சில குழுவினர் விலக வேண்டும்.
அந்தக் குழுக்களை நீக்கினால் தையிட்டி விகாரை தொடர்பான பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குமானால், அதனை ஒடுக்குவதற்குத் தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய மக்கள் சக்தி எடுக்கத் தயாராக உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி எந்தவொரு காணியையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி வைத்திருக்க முடியாது. எனவே எம்மால் முடிந்தளவில் காணிகளை விடுவித்து வருகிறோம்.பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு எவரேனும் காணாமல்போயிருந்தால் அது தொடர்பில் உண்மைகளைக் கண்டறியத் தயாராகவுள்ளோம். எமது உறவினர்களும் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளனர் எனவே என்னாலும் அந்த வலியை உணர முடியும். வடக்கில் புதிதாக ஒரு தெங்கு முக்கோண வலயத்தை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.
அதேநேரம், வடக்கினை முன்னேற்றுவதற்கு முதலீடு செய்வதற்காகப் புலம்பெயர்ந்தோர் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
