பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள்.
முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தப் பயணத்தை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் ஏப்ரல் 14ஆம் தேதி திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழுவில், பாப் பாடகியான கேட்டி பெர்ரி, செய்தியாளர் கேல் கிங், சிவில் உரிமைகள் வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆறாவது பெண்ணாக, இந்தக் குழுவை வழிநடத்தப் போகிறவரும் ஜெஃப் பெசோஸின் காதலியுமான லாரன் சான்செஸ் பயணிக்கவுள்ளார்.இவர்கள் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான கார்மன் கோட்டைக் கடந்து செல்வார்கள்.
