பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு தற்போதைய அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு மயிரைக்கூட பிடுங்காது. பட்டலந்த வதை முகாமைவிட கொடூரமான முகாமாக விளங்கிய பரகல முகாமில் இருந்தவர் தற்போது ஆட்சியில் பதவி வகிக்கின்றார்.” என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (11) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ‘ ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு மயிரைக்கூட இந்த அரசாங்கம் பிடுங்காது. ஏனெனில் பட்டலந்த அறிக்கை சபைக்குவந்தபோது அதனை ஜனாதிபதி விரும்பவில்லை.
தற்போது சூறாமீன்கள் இருக்க நெத்திலி மீன்களே பிடிக்கப்பட்டுவருகின்றன. இதுவரை கைது செய்யப்பட்ட நபர்களில் சாமர சம்பத் மட்டுமே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி.
பிள்ளையான் தோல்வி அடைந்தவர், மேர்வின் சில்வாவும் தோல்வி அடைந்து வீட்டில் இருந்தவர். வியாழேந்திரனும் தோல்வி அடைந்தவர்.
நான் மட்டுமே மக்கள் ஆணை பெற்றவன். எனவே, ஏனையோரை இந்த அரசாங்கம் கைது செய்யாது. ரணிலின் வாலைக்கூட பிடிக்க முடியாது. ஜனாதிபதியும், பொலிஸ் அமைச்சரும் அதனை செய்யமாட்டார்கள்.
அதேவேளை, பட்டலந்த பற்றி கதைக்கின்றனர். பட்டலந்த வதை முகாமைவிட பெரியதுதான் பெரகல முகாம். அங்கு கோனி பில்லா என ஒருவர் இருந்தார்.
அந்த கோனி பில்லா தற்போதைய ஆட்சியில் பதவி வகிக்கின்றார். இலங்கையில் பயங்கரமான வதைகளை வழங்கிய முகாம்தான் பெரகல முகாமாகும்.
கோனி பில்லாவின் பெயரை நான் வெளியிடமாட்டேன். எனது கதை சமூகவலைத்தளங்களில் வரும்போது அதனை மக்கள் வெளிப்படுத்துவார்கள்.
பட்டலந்த அறிக்கை தொடர்பான யோசனை காலத்தை வீணடிக்கும் செயல். ரணிலின் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியாது. வேண்டுமானால் நெத்திலி மீன்களை பிடித்து சில நாட்கள் சிறை வைத்து மகிழலாம்.”என தெரிவித்துள்ளார்.
