அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம்

490452763_988431230101245_2953479114049762234_n.jpg

அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம் இல்லாத செயல் தலைவராக நியமித்து, பா.ம.க.,வில் அதிரடி ஆட்டம் ஆடியுள்ளார் ராமதாஸ். ”இனி நானே நிறுவனர்; நானே தலைவர்,” என்றும் அவர் அறிவித்துள்ளார்.திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டி:

சமுதாயத்தைப் பீடித்த அறியாமை நோயை தீர்க்கும் மாமருந்து அரசியல் அதிகாரம் என்பதை உணர்ந்து, 1989ல் பா.ம.க.,வை துவக்கினேன். தமிழகத்தில் என் கால் தடம் படாத கிராமங்களே இல்லை என்கிற அளவுக்கு பயணித்து, கட்சியை கட்டமைத்தேன். தமிழகம் மட்டுமல்லாது, இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தினேன். பாளையங்கோட்டை தவிர, மற்ற அனைத்து மத்திய சிறைகளிலும் கொடுமைகளை அனுபவித்து, இந்த இயக்கத்தை நடத்தி வருகிறேன்.திருச்சியில் கைவிடப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட பின், மறு பிறவி எடுத்து வந்தேன். நான் பார்லிமென்டிற்கோ, சட்டசபைக்கோ செல்ல ஆசைப்பட்டதில்லை. இனியும் வாழ்நாள் முழுதும் ஆசைப்பட போவதில்லை. லட்சோப லட்சம் பாட்டாளி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். இதை விட பெரிய பதவி வேறு எதுவும் இல்லை. தினமும் நுாற்றுக்கணக்கான பாட்டாளி சொந்தங்களும், பொது மக்களும் என்னை சந்திக்கின்றனர்.

கடந்த, 1989ம் ஆண்டு துவக்கத்தில் இருந்த, என் செயல்பாடுகளை பார்த்தது இல்லை என்றும், என் தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்றும், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் புதிய தலைமுறையினர் அன்பு கட்டளையிட்டனர். அவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றவும், வரும், 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும், பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன். அதன்படி, பா.ம.க., நிறுவனராகிய நான், இனி தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன்.

தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ம.க., தலைவராக இருக்கும் அன்புமணியை, கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். அதை ஏற்று, பா.ம.க.,வினர் ஒன்றுபட்ட உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும். வரும் மே, 11ல் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, இதுவரை கண்டிராத வகையில் வெற்றிகரமாக நடக்க, மாநாட்டு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணியுடன் இணைந்து உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தி.மு.க., கூட்டணிக்கு விருப்பம்:

‘தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற வேண்டும்’ என, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் கூட்டணி முடிவை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எடுத்த போது, கட்சிக்கு வெற்றி கிடைத்தது. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க, தைலாபுரம் வீட்டிற்கு டில்லி தலைவர்களும், தமிழக தலைவர்களும் சென்று, ராமதாசிடம் பேச்சு நடத்தினர்.

அன்புமணி கட்சி தலைவரான பின், அவர் கூட்டணியை முடிவு செய்கிறார். சென்னை வரும் அமித் ஷாவை சந்தித்து, கூட்டணியை முடிவு செய்ய அன்புமணி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது, இதை ராமதாஸ், சில மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை. இப்போதே அமித் ஷாவிடம் கூட்டணியை உறுதி செய்தால், தி.மு.க., – அ.தி.மு.க., போன்ற கட்சிகளிடம், தொகுதி பங்கீடு குறித்து பேரம் பேசுவது குறைந்து விடும்.

தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் வெளியேறினாலும், வெளியேறவில்லை என்றாலும், பா.ம.க., இணைந்தால் வெற்றி பெற முடியும் என, பா.ம.க., – எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற பா.ம.க., – எம்.எல்.ஏ.,க்கள், தற்போது தி.மு.க.,வுடன் நெருக்கம் காட்டுகின்றனர். அ.தி.மு.க., பிரிந்திருப்பதால், அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே, அக்கட்சிக்கு பதில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம். தி.மு.க.,வில் வாய்ப்பில்லை என்றால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்.அதற்கு முன், பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகளிடம் மதிப்பு இருக்காது என, பா.ம.க., – எம்.எல்.ஏ.,க்கள் ராமதாசிடம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *