தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் யாரையும் வளர விடுவதற்கு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அச்சம் காணப்பட்டமையினால், அவர் அதனை விரும்ப மாட்டார் என அந்த அமைப்பின் முன்னாள் தளபதியும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழ் உடனான நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை அரசாங்கத்தற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இந்த காலப் பகுதியிலேயே முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தனர்.விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் பிரிந்தமையானது, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சி காரணமாக இடம்பெற்ற ஒரு செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் பேச ஆரம்பித்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், கருணா அம்மானிடம் வினவியது.சூழ்ச்சி என்று கூறுவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்று முழுதாக தவறான விடயம். உண்மையிலேயே எங்களுடைய தளபதிகளும், போராளிகளும் நீண்டகாலமாக வெறுப்படைந்திருந்தார்கள். வடக்கை பொருத்தவரையில் தலைவருக்கு நெருக்கடி வருகின்ற பொழுதெல்லாம், எங்களது அணி தான் அவரை காப்பாற்றியது. மணலாறு சண்டையாக இருக்கலாம். மட்டக்களப்பு போராளிகள்தான் அவரை காப்பாற்றினார்கள். அதேபோன்று தலைவரின் மெய் பாதுகாவலர்களை கூட நாங்கள் தான் தெரிவு செய்து அனுப்புவோம். அந்தளவிற்கு காப்பாற்றினோம்.
அதன் பிறகு போராட்ட கட்டமைப்பு. 25திற்கும் அதிகமான போராட்ட கட்டமைப்புக்கள் இருந்தாலும் அதில் ஒரு கட்டமைப்பில் கூட கிழக்கு மாகாண போராளிகள் வரவே இல்லை. கடற்புலியாக இருக்கலாம். புலனாய்வு துறையாக இருக்கலாம். அரசியல் துறையாக இருக்கலாம். அந்த துறைகளில் கிழக்கு மாகாண போராளிகளை காண முடியாது.
அது அவர்கள் திட்டமிட்டு செய்தார்களா? அல்லது மனம் இடம் கொடுக்காமல் தானாக வளர்ந்ததா? என்பதை நாங்கள் புரிந்துக்கொள்ளவில்லை. இருந்தாலும், தலைவரிடம் நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். இந்த சமநிலையை பேணாவிட்டால், பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பிருக்கின்றது என் கூறினேன். விடுதலைப் புலி கட்டமைப்பு என்பது அரசுக்கு சமமான கட்டமைப்பாக இருந்தது. கருணா அம்மானை தவிர வேறு எவருமே மேல் பதவியில் இருக்கவில்லை. எத்தனையோ பதவி நிலைக்கான நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்தும், இருக்கவில்லை.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே கிழக்கு மாகாண போராளிகள் இணைந்து கொண்டார்கள். அவர்கள் காலம் கடந்து இணையவில்லை. எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதே அவர்களும் இணைந்துக்கொண்டார்கள். அந்த சமநிலை பேணாமை முக்கியமான காரணமாக இருந்தது.” என அவர் கூறுகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்திற்குள் சந்தேகம் எழ ஆரம்பித்ததாகவும் கருணா அம்மான் கூறுகின்றார்.
