பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரித்தானியா மனிதவுரிமை மீறலில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தடை விதித்துள்ளது. இதனை நாம் முதலில் வரவேற்கின்றோம். ஆனால் வினோதம் நடைபெறுகிறது. தென்னிலங்கையில் தற்போது உள்ள அரசு சார்ந்தவர்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்று இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.
ஜேவிபி அரசாங்கம் ஆரம்பத்தில் எமது இனப் பிரச்சனை தொடர்பில் ஐ.நா தீர்மானம் எடுக்கப்பட்ட உடனேயே அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை கொடுக்கவில்லை. இப்பொழுது நான்கு பேருக்கு தடை விதித்ததை வைத்துக் கொண்டு அமைச்சர் அனைவரும் கூக்குரல் போடுவது இனவாதத்தின் அடிப்படையில் இநத அரசாங்கம் செயற்படுவதை தொட்டத் தெளிவாக காட்டுக்கின்றது.
ஆகவே, எங்களைப் பொறுத்தவரை எப்படி சிங்கள தேசத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் ஆட்சியாளர்கள், கட்சிகள் ஒண்றிணைந்து செயற்பட்டு அதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற விடயத்தை நாம் வரலாறு ரீதியாக பார்க்கின்ற விடயம். தற்போதும் பார்க்கின்றோம். ஆனால் எங்களுக்குள் ஒற்றுமையீனத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எங்களது போராட்டங்களும் ஒரு மித்த போராட்டமாக நடைபெறுவதில்லை. ஆகவே தொடர்ந்தும், மனிதவுரிமை மீறல்கள் செய்தவர்களுக்கு ஐ.நா சபை கூட அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகின்ற நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஆதரிக்க வேண்டும்.
