டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் முடிவு செய்துள்ளது.டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகை விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தார். அந்த வேளையில், அவரது குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், நீதிபதியின் குடும்பத்தினர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
அதன்பேரில், தீயை அணைக்க வந்த போது, நீதிபதியின் வீட்டில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதனை பறிமுதல் செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அமைப்பில் உள்ள 5 உறுப்பினர் நீதிபதிகளும் ஒருமனதாக திட்டமிட்டுள்ளனர். மேலும், டில்லியில் இருந்து அலகாபாத் ஐகோர்ட்டிற்கு யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்யவும் கொலிஜியம் முடிவு செய்துள்ளது.
ஆனால், அவரை ஏற்க முடியாது எனக்கூறி அலகாபாத் ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.அதேவேளையில், ஒரு சிலரோ, நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய யஷ்வந்த் வர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அவரை பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். அலகாபாத் ஐகோர்ட் என்ன குப்பைத் தொட்டியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.டில்லி பல்கலை.யின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், ம.பி.,யின் ரேவா பல்கலையில் சட்டப்படிப்பு படித்தார்.
1992 ஆக., 8 ல் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
அலகாபாத் ஐகோர்ட்டில் மாநில அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.
2014 ல் அதே ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2016 ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் அரசியலமைப்பு, தொழிலாளர் பிரச்னை தொழிற்சாலை நிர்வாகம் , மாநகராட்சிகள் மற்றும் வரிகள் குறித்த வழக்குகளை விசாரித்து வந்துள்ளார்.
