மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட பாலையடிவட்டைக் கிராமத்திற்குள் செவ்வாய்கிழமை(18.03.2025) நள்ளிரவு புகுந்த இரண்டு காட்டுயானைகளால் அங்குள்ள மக்கள் நள்ளிரவில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர்.
இரண்டு காட்டுயானைகள் இவ்வாறு கிராமத்திற்குள் உட்புகுந்து குடியிருப் பொன்றிலிருந்த தென்னைமரங்களை அழித்துவிட்டுச் சென்றுள்ளன. இந்நிலையில் அங்குள்ள மக்கள் நள்ளிரவு வேளையிலேயே ஒன்றுகூடி காட்டுயானைகளை ஒருவாறு கிராமத்தை விட்டு விரட்டியுள்ளனர். அப்பகுதியில் இரவும் பகலுமாக இவ்வாறு காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்தவண்ணமேயுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே காட்டுயானைகளின் அழிவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் யானைப் பாதுகாப்பு வேலியை உடன் அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
