யூடியூபர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்

download-9-11.jpeg

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூபர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்ற காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

அவர் உதவி தேவைப்படுவோரிடம் நக்கல், நையாண்டியோடு பேசி காணொளி எடுத்து பதிவிட்டு வந்த நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பி வந்தன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் வீட்டுக்கு இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் சமரசம் பேசச் சென்றபோது, அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸார் யூடியூபரையும் மூவரையும் கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைகளின் பின்னர், நால்வரையும் விளக்கமறியலில் வைக்கவும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது விசாரணை நடத்தி கைது செய்யவும் மன்று உத்தரவிட்டது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *