வைத்திய நிபுணர் திடீர் விலகல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்

download-6-24.jpeg

மன்னார் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் திடீர் விலகல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகி உள்ளமையினால் தமது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் உரிய முறையில் வைத்திய சேவையினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம்-07 மற்றும் புதிதாக பிறக்கின்ற குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 7 இல் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் தாமதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தைகளை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விடயத்தில் வடமாகாண ஆளுநர் உடனடியாக தலையிட்டு குறித்த வைத்திய நிபுணருக்கு பதிலாக ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்காலிகமாக வவுனியாவில் இருந்து ஒரு வைத்திய நிபுணரை கடமைக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆஸாத் எம்.ஹனிபா தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *