பழனி முருகன் கோயில் தைபூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாளை திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுதினம் (11ஆம் தேதி) தைப்பூசமும், திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று முருகனின் அருளை பெற நாள்தோறும் பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர். இதனால் சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்குச் செல்ல வின்ச், ரோப் கார் உள்ளிட்ட பக்திகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு
நினைவறங்கம் வழியாக பக்தர்கள் மேலே மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவும் சாமி தரிசனம் செய்து முடித்து மங்கம்மாள் மண்டபம் வழியாக கீழே இறங்கி வரவும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதிகளில் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பலவகை காவடிகள் எடுத்து வந்து ஆடிப்பாடி மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளதால் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.