வங்கதேசத்தில் பிரபல இந்து மதத் தலைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து வங்கதேச அரசு விலகக் கூடாது எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
�
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டு, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது முதலாகவே அங்கு இந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோர் பலியானதோடு, நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். மேலும், இந்து கோயில்களும் சூறையாடப்பட்டன.
�
இது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்துக்களுக்கு எதிரான கலவரத்தை வங்கதேச அரசு ஒடுக்கி வருகிறது. எனினும், வன்முறையாளர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, வங்கதேச பூஜா உத்ஜாபன் பரிஷத் என்ற இந்து அமைப்பின் துணைத் தலைவராக இருந்த பபேஷ் சந்திர ராய் என்பவரை, கடந்த 16ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். பின்னர், அவரை ஓரிடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர், அன்றைய தினம் இரவு, ரத்த வெள்ளத்தில் வேனில் கொண்டு வரப்பட்ட
�
அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.பபேஷ் சந்திரராயின் மரணச் செய்தி, வங்கதேச இந்து மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
�
இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் ஜெய்ஸ்வால் கூறுகையில், “வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து மக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட திட்டமிட்ட சித்ரவதையை அடுத்து, இந்து மதத் தலைவர் பபேஷ் சந்திரராயின் கொடூரக் கொலை அரங்கேறி இருக்கிறது. இந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்கள் எந்தவித தண்டனைக்கும் உள்ளாகாமல் வங்கதேசத்தில் சுற்றித் திரிகிறார்கள். இந்த சம்பவத்தை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன்.
மேலும், இந்து உள்ளிட்ட சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து வங்கதேச அரசு விலகக் கூடாது எனவும் இந்தியா வலியுறுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.
