ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “வடக்கு மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களில் ஜனாதிபதி ஆற்றிய உரைகளை, தமிழ்த் தலைவர்களும் உறுப்பினர்களும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் மக்களை ஏமாற்றி வந்த தமிழ்க் கட்சிகளுக்கு, ஜனாதிபதியின் உரையை விமர்சிக்க எந்த நியாயமும் இல்லை. வடக்கில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே ஜனாதிபதி உரையாற்றினார்.
அவரின் உரை, தமிழ்க் கட்சிகளில் தேர்தல் தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது. அதனால்தான் அவர்கள் கட்டுக்கடங்கா விமர்சனங்களைச் செலுத்துகின்றனர். தமிழ் மக்களின் ஆதரவை அவர்கள் தடுக்க இயலாது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிராக நிற்கின்றனர். கடந்த காலங்களில் வடக்கும் தெற்கும் இனவாதம், மதவாதம் மூலம் அரசியல் நடத்தப்பட்டதை நிறைவு செய்யும் நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்துள்ளது.
வடக்கில் திஸ்ஸ விகாரையை முன்வைத்து இனவாத அரசியலை ஊக்குவிக்க எமது அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய அரசிலும் உள்ளூர் ஆட்சிகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தால், அது நாடு மற்றும் மக்களுக்குப் பெரும் நன்மைகளைத் தரும்.
ஏனெனில், ஊழலும் மோசடிகளும் இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி. இதை எமது ஜனாதிபதியும் எமது கட்சி உறுப்பினர்களும் வெளிப்படையாகச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை,” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
