தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக நேர்மையுடன் தீர்வு காண ஜனாதிபதி அநுர தயாரா ? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கேள்வி தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக நேர்மையுடன் தீர்வு காண ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று (18) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில், அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவையும் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.
ஜனாதிபதியின் நேற்றைய உரை மற்றும் தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கஜேந்திரகுமார் தனது உரையில், ஜனாதிபதி மற்றும் அவரது கட்சி தேர்தலுக்கு முன் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என NPP உறுதியளித்திருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் இவற்றுக்கு தீர்வு காண எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் மக்களை ஏமாற்றி, மேடைகளில் புனிதர்களாக காட்டிக்கொண்டு ஏமாற்று வித்தைகளை செய்கிறார்கள்,” என கஜேந்திரகுமார் கூறினார்.
மேலும், தையிட்டி விகாரை விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதை விமர்சித்த அவர், அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி உடனடியாக அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார்.
“தமிழ் மக்கள் விவகாரத்தில் எதுவும் செய்யாமல், மற்றவர்கள் மீது பழி சுமத்தி தப்பிக்க முயலக் கூடாது,” எனவும் அவர் தெரிவித்தார்.
இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம் எனக் கூறும் ஜனாதிபதியும் அவரது கட்சியும், இனவாத மற்றும் மதவாத பரப்புரைகளில் ஈடுபட்டதாக கஜேந்திரகுமார் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் மக்கள் விவகாரத்தில் எப்போதும் இனவாத மற்றும் மதவாத ரீதியாக செயல்படுவது JVP. ஜனாதிபதியின் செயல்களும் பேச்சுகளும் இனவாதத்தையே பிரதிபலிக்கின்றன. உண்மையான இனவாதிகள் அவர்களே,” என அவர் கூறினார்.
தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக நேர்மையுடன் தீர்வு காண ஜனாதிபதி தயாரா என கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
