பிள்ளையானின் கைதால் ரணில், கம்மன்பில கலக்கம் அடைவது ஏன்? ரில்வின் சில்வா கேள்வி பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏன் கலக்கமடைய வேண்டும்.
பல குற்றங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. உதய கம்மன்பிலவின் சிங்கள, பௌத்தவாதம் தற்போது காணாமல் போயுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
காலி பகுதியில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தோல்வியடைந்த அரசியல் கட்டமைப்பை புறக்கணித்து தான் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையில் பலமான அரச கட்டமைப்பை உருவாக்கினார்கள்.
ஊழல், மோசடிகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள்.
அரசாங்கத்தின் சிறந்த பயணத்துக்கு தடையாக செயற்படுகிறார்கள். ஆட்சிக்கு வந்து 6 மாத காலத்துக்குள் நிலையான சிறந்த அபிவிருத்திக்கான அடித்தளமிட்டுள்ளோம்.
ஆகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று தோல்வியடைந்தவர்கள் மாத்திரம் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பிள்ளையானை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி கோரினார். அவர் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்ததற்காக சட்டத்துக்கு முரணாக செயற்பட இடமளிக்க முடியாது.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் பிள்ளையானுடன் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் பிள்ளையானை சந்திப்பதற்கு உதய கம்மன்பில அனுமதி கோரியுள்ளார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னர் பிள்ளையான் சார்பில் தான் சட்டத்தரணியாக முன்னிலையாகுவதாக குறிப்பிட்டு, பிள்ளையானை சந்தித்துள்ளார்.
பிள்ளையான் சார்பில் முன்னிலையாகுவதாக உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். உதய கம்மன்பில சட்டத்தரணியாக இருக்கலாம்.
ஆனால் அவர் எந்த வழக்குக்காகவும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. நாட்டு மக்கள் இதனை நன்கு அறிவார்கள். பிள்ளையானை கைது செய்தவுடன் ரணில் விக்கிரமசிங்க, உதய கம்மன்பில ஆகியோர் கலக்கமடைந்துள்ளனர்.
உதய கம்மன்பில கடந்த காலங்களில் சிங்கள பௌத்தவாதம், இனவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்தார்.
அத்தகையவர் பிள்ளையான் தேசிய வீரன் என்று புகழ் பாடுகிறார். அவரது தேசிய அரசியல் தோல்வியடைந்துள்ளது. கடந்த கால குற்றங்களின் பின்னணியில் அரசியல் பின்னணிகள் பல உள்ளன என்றார்.
