பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உண்மையாகவே செயல்படுத்துவதாக இருந்தால், கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விப் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பட்டலந்த விசாரணை அறிக்கை பூரணமான அறிக்கையல்ல. அது 280 பக்கங்களைக் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையாகும்.
சாட்சி அறிக்கைகள் உடன் மொத்தமாக அந்த விசாரணை அறிக்கை 700க்கும் அதிக பக்கங்களைக் கொண்டதாகும். அந்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறே நாங்கள் தெரிவித்திருந்தோம்.அதேபோன்று இந்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்ப்பதாகத் தெரிவித்திருந்தார்கள்.
என்றாலும் இந்த விசாரணை அறிக்கை 1998 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்த பின்னர் இந்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டது.
அது தொடர்பான பிரதிகளை அரச வெளியீட்டு நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வாறு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியது இல்லை.
ஏனெனில் பட்டலந்த ஆனைக்குழு அமைக்கப்பட்டிருப்பது, ஆணைக் குழுவின் அதிகாரங்கள் வரையறுக்கப்படும் 1948-ஆம் இலக்க சட்டத்திலாகும். அதன் பிரகாரம் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு மாத்திரமே முடியுமாகிறது. தற்போது அரசாங்கத்துக்கு இருப்பது பட்டலந்த ஆணைக்குழுவுக்கு ஏற்புடைய பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை அமைப்பதாகும்.
உதாரணமாக, பட்டலந்த ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்று தான் சித்திரவதை முகாமை முன்னெடுத்துச் சென்றதாகச் சாட்சிகளுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நபர்களின் பிரஜா உரிமையை ரத்து செய்வதாகும்.
அது தொடர்பான சட்டங்களை அமைத்துக் கொள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் இருக்கிறது. அதனால் மீண்டும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை
அத்துடன் அரசாங்கம் இந்த ஆணைக் குழு தொடர்பில் பரிந்துரைகளை மேற்கொள்ள குழு ஒன்றை அமைப்பதாக தெரிவித்துள்ளது. என்றாலும் பட்டலந்த விசாரணை அறிக்கை என்பது குழு ஒன்றின் ஊடாக மிகவும் ஆழமாக சாட்சிவிசாரணைகளை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான அறிக்கையாகும்.
அதனால் மீண்டும் குழு அமைப்பது என்பது காலத்தை வீணடிக்கும் செயலாகும். அதே நேரம் பட்டலந்த ஆணை குழுவுக்கு முன்னால் சாட்சி கூறிய பலர் இன்று உயிருடன் இல்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு மீண்டும் சாட்சி பதிவு செய்ய முடியும்.?
அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும் போது குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமல் இதனை தொடர்ந்து எழுத்தடிப்பதற்கு முயற்சிக்கின்றது போன்றே இருக்கிறது. ஏனெனில் பாராளுமன்றத்தில் இந்த விவாதம் இடம்பெறும் போதும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டிருக்கவில்லை. எனவே அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நபர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்
