இன்றைய (14/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
“மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு விரைவில் மனு தாக்கல் செய்ய தயாராகி வருகிறது”, என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதன்படி மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இதேபோல மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது”, என்கிறது அந்த செய்தி.தொடர்ந்து அதில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் அவசர சட்டங்கள் நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது”, என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பால், காலாவதி மசோதாக்கள் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின்போது, மசோதா குறித்து முடிவு எடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யக் கூடாது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. எங்களது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்’ என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
