வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 150 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனிடையே, உயிருக்கு பயந்து அங்குள்ள ஹிந்துக்கள் தங்களின் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.வக்ப் சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இதில் முர்ஷிதாபாத் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன் சுடி, துலியான், சாம்செர்கன்ஜ் மற்றும் ஜான்கிபூர் உள்ளிட்ட பகுதிகளும் பாதிப்பைச் சந்தித்து உள்ளன. இங்கு அரசு வாகனங்கள், பொதுச் சொத்துகள் உள்ளிட்டவை அடித்து சேதப்படுத்தப்பட்டு உள்ளன. கல்வீச்சு சம்பவங்களில் பல போலீசார் காயமடைந்து உள்ளனர். இந்த கலவரம் காரணமாக 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதனையடுத்து, போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.டிஜிபி பேட்டி
கலவரம் தொடர்பாக மாநில டிஜிபி ராஜீவ் குமார் கூறியதாவது: எந்த குண்டர்களையும் , சமூக விரோதிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டாம் என போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டத்துடன் துவங்கிய இந்த போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டது. பிறகு, அது மத ரீதியில் சென்றது எனக்கூறினார்.பா.ஜ., குற்றச்சாட்டு
பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ” 400க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில் மத ரீதியில் துன்புறுத்தப்படுவது உண்மையில் நடக்கிறது. திரிணமுல் காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியல், பிரிவினைவாத சக்திகளுக்கு தைரியம் அளித்து உள்ளது. ஹிந்துக்கள் வேட்டையாடப்படுகின்றனர். சொந்த மண்ணிலேயே அவர்கள் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.