பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசாங்கம் உறுதி – பிரதமர் ஹரிணி காணாமற்போனோர் தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்றைய (09) பாராளுமன்ற அமர்வில், தமிழரசுக் கட்சியின் எம்.பி இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குபோதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலையடுத்து புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதியை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. எனினும் தனிப்பட்ட விதத்தில் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. நிறுவனக் கட்டமைப்பின் ஊடாகவே விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் தோல்வியடைந்துள்ளன. கட்டமைப்பின் சாத்தியம் இன்மையே இது தாமதமடைவதற்கு முக்கிய காரணமாகும்.
அதனால் இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இத்தகைய அசாதாரண சூழல் தோற்றம் பெறாத வகையில் நிறுவன கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.
இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் காணாமற் போனோர் அலுவலகம் ஆகியன மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்துள்ளமைக்கு முக்கிய காரணம் அந்த அலுவலகங்கள் பெயரளவில் ஸ்தாபிக்கப்பட்டமையே.
