மறைந்த காங். மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், பா.ஜ.,வைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன், 93, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சையில் இருந்தார்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் ஒருமுறை எம்.பி.,யாகவும், நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர்.
காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், 1980ல் காந்தி காமராஜ் என்ற கட்சியை துவங்கினார். பின் அதை காங்கிரசுடன் இணைத்தார். தமிழக அரசு கடந்த ஆண்டு குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியது.
சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் குமரி அனந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சட்டசபை இன்று (ஏப்.9)கூடியவுடன் அவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந் நிலையில் மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அவரது பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.
