சர்வ கட்சி மாநாட்டை கூட்டுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் கைத்தொழில் துறையில் கணிசமான பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் உட்பட முன்னைய எந்த அரசாங்கங்களும் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை.
இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி விதிப்பால் இந்த தொழிற்துறையினர் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த தொழில் துறைகளும் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
எனவே நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையினரை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பராட்டே சட்டம் மீண்டும் அமுலுக்கு வருவது தொடர்பில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் பாராளுமன்றத்தில் இன்று (08) கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு காணப்படும் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அதிகாரங்களை இடைநிறுத்திய காலம் 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றன.
பராட்டே சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏலம் விடும் அதிகாரங்களை இடைநிறுத்துவதை மேலும் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா ? என எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
