இலங்கைக்கு ஆப்பு வைத்தஅமெரிக்கா பொருட்களுக்கு 44% வரி

download-1-4.jpeg

இலங்கை பொருட்களுக்கு 44% வரியை விதித்த அமெரிக்கா
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார்.

உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.

கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்தே அதிக அளவில் ஆடை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதுடன், இந்த வரி விதிப்புடன் அந்தத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்ததுடன், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 346 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *