20 பேர் பலி – புதிய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கம்

487222679_980545187556516_7140669613059661241_n.jpg

காசாவில் பெருநாள் தினத்திலும் இஸ்ரேல் கடும் தாக்குதல் – 20 பேர் பலி – புதிய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கம் காசாவில் மத்தியஸ்தர்கள் முன்வைத்த போர் நிறுத்த திட்டம் ஒன்றுக்கு இணக்கத்தை வெளியிட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் நேற்று (30) நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டபோதும் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் பிடியில் இருக்கும் மேலும் ஐந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் 50 நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கே ஹமாஸ் அமைப்பு ஆதரவை வெளியிட்டுள்ளது.

எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களால் அனுப்பப்பட்ட போர் நிறுத்தத் திட்டத்திற்கே ஒப்புதல் அளித்ததாக காசாவுக்கு வெளியில் வசிக்கும் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரான கலில் அல் ஹய்யா அறிவித்துள்ளார்.

‘இரண்டு நாட்களுக்கு முன்னர் எகிப்து மற்றும் கட்டாரில் உள்ள மத்தியஸ்தர்களிடம் இருந்து முன்மொழிவு ஒன்று எமக்கு கிடைத்தது. நாம் அதனை சாதகமாக கையாண்டதோடு இணக்கத்தை வெளியிட்டோம்’ என்று கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி உரை ஒன்றில் ஹய்யா கூறினார்.

‘இதனை ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) குறைத்து மதிப்பிடமாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தமக்கும் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் முழு ஒருங்கிணைப்புடன் பதில் முன்மொழிவு ஒன்றை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு காசா நகரான ரபாவில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் உள்ள மக்கள் நேற்று (30) நோன்பு பெருநாளை கொண்டாடினர். இஸ்ரேலின் குண்டு வீச்சு மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மக்கள் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *