தெலுங்கானாவைச் சேர்ந்த மாப்பிள்ளை ஒருவர், திருமண விழாவில் இரண்டு பெண்களை மணந்து கொண்டது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது; பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் லிங்காபூர் மண்டலை சேர்ந்தவர் சூர்யாதேவ், இவர் ஐதராபாத்தில் சினிமாதுறையில் பணி செய்து வருகிறார். இவருக்கும் செட்டிஹத்பனுார் ராஜூலகுடா, சிர்பூர் மண்டலை சேர்ந்த கனகா லால் என்பவருக்கும் 3 ஆண்டுகளாக காதல் இருந்தது.
அதேவேளையில், புல்லாரா என்ற கிராமத்தை சேர்ந்த ஜல்கர் தேவியுடனும் பழகி காதலை வளர்த்தார். இந்த இரு பெண்கள் வீட்டிலும் காதல் விபரம் தெரியவர, பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்து பெரியவர்கள் தலையிட்டு பேசினர்.இந்த பேச்சுவார்த்தையில் சூர்யா தேவ் இருவரையும் விரும்புவதாக கூறியதால், திருமணம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. பெண் வீட்டார் தரப்பில் புகார் அளிக்கப்படாததால் போலீசார் இதில் தலையிட வில்லை.
திருமணம் இரு பெண்கள் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குமரம்பீம் ஆஷிபாபாத் மாவட்டம் ஜக்தியால் மாவட்டத்தில் கிராம பெரியோர் முன்னிலையில் இரு மணமகள்களும் மாப்பிள்ளையுடன் ஒரே மேடையில் அமர்ந்தனர். ஒரே திருண மேடையில் கனகா லால் மற்றும் ஜல்கர் தேவி இருவரையும் கரம் பிடித்தார் மாப்பிள்ளை சூர்யாதேவ். இந்த திருமணம் ஹிந்து சம்பிரதாயப்படி நடத்தப்பட்டது.
இரு மணப்பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு மற்றும் பொறுப்பை உறுதியளிக்கும் பத்திரத்தில் மாப்பிள்ளை சூர்யா தேவ் கையெழுத்திட்டார்.
இந்த திருமண விழாவில் மூன்று கிராமங்களிலிருந்தும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.இந்த சம்பவம், #TwoBridesOneGroom என்ற ஹேஷ்டேக்குடன் வைரலாகியுள்ளது.
