ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இறந்துவிடுவார்; எல்லாம் முடிந்துவிடும்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
”ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இறந்துவிடுவார்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, இதற்கு பலனாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் மற்றும் உரம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. புதினுடைய முகம் வீங்கியிருப்பது, கை கால்கள் நடுக்கம், கட்டுப்பாடின்றி வளையும் கால்கள் ஆகிய விஷயங்கள் அவருடைய உடல்நலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும், புதின் விரைவில் இறந்துவிடுவதாகக் கூறியதாக செய்திகள் வெளியாகியிருப்பதும் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாக தி கியேவ் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.கடந்த மார்ச் 26 அன்று பாரிஸில் ஐரோப்பிய பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, “உலகளாவிய தனிமையில் இருந்து புடினுக்கு இப்போது வெளியேற அமெரிக்கா உதவாமல் இருப்பது மிகவும் முக்கியம். இது மிகவும் ஆபத்தான தருணங்களில் ஒன்றாகும். சாகும்வரை ஆட்சியில் நீடிக்க புடின் விரும்புகிறார். மேலும் அவரது லட்சியங்கள் உக்ரைனுடன் மட்டுமல்ல, மேற்கு நாடுகளுடன் நேரடி மோதலுக்கும் வழிவகுக்கும்.
புதினுக்கு அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். புதின், ஐரோப்பிய-அமெரிக்க கூட்டணிக்கு அஞ்சுகிறார். அதைப் பிரிக்க விரும்புகிறார். அவர் விரைவில் இறந்துவிடுவார். இது உண்மை. எல்லாம் முடிந்துவிடும்” என அவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.முன்னதாக இதேபோன்று கடந்த 2023ஆம் ஆண்டும் ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாகவும், இதனால் புதினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் செய்திகள் பரவியிருந்தன. தற்போதும் அதேபோன்று வதந்தி செய்திகள் வேகமெடுத்துள்ளன.