ஆப்ரிக்காவில் 2 தமிழக என்ஜினியர்கள் உள்பட 7 பேர் கடத்தல்: கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் ஆப்ரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த 2 என்ஜினியர்கள் உள்பட 7 பேர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமண பிரதீப்முருகன். தனியார் கப்பல் நிறுவனம் ஒன்றில் 3 ஆண்டுகளாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர், கப்பல் ஒன்றில் லோம் பகுதியில் கேமரூனுக்குச் சென்று கொண்டிருந்தார். லட்சுமண பிரதீப் முருகனுடன், கரூரைச் சேர்ந்த சதிஷ்குமார் செல்வராஜ், பீகாரைச் சேர்ந்த சந்தீப்குமார் சிங், கேரளாவில் இருந்து ராஜீந்திரன், ருமேனியாவைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
மார்ச் 17ம் தேதி மத்திய ஆப்பிரிக்காவில் வடகிழக்கு சான்டோ அன்டோனியா பிரின்ஸ் என்ற பகுதியில் 40 கடல்மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த கடற்கொள்ளையர்கள் கப்பலை முற்றுகையிட்டனர்.இதையறிந்த லட்சுமண பிரதீப் முருகன் உள்ளிட்டோர் கப்பலில் இருந்த எச்சரிக்கை மணியை ஒலிக்க வைத்தனர். அதற்குள் கப்பலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அனைவரையும் பிணை கைதிகளாக பிடித்து வைத்தனர்.
கடற்கொள்ளையர்களால் லட்சுமண பிரதீப் முருகன் உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ள விவரம், அவரின் சகோதரர் ராம் பிரவீனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், கடத்தப்பட்ட விவரத்தை மறுநாள் (மார்ச் 18) எங்களுக்கு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் தெரிவித்தது.
அதன் பின்னர் கடத்தப்பட்டவர்களின் நிலவரம் பற்றி எந்த தகவலும் கூறவில்லை. மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறினாலும், அதுபற்றி எந்த உத்தரவாதமும், எங்களுக்கு அளிக்கப்படவில்லை. உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து, அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
