சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன் மார்ச் 19, 2025 (இந்திய நேரப்படி அதிகாலையில்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பத்திரமாகத் தரையிறங்கும் தருணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகாலை 3.15 மணிக்கு, அந்த விண்கலத்துடனான பூமியின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
அப்போது விண்கலம், பூமியிலிருந்து 70 முதல் 40 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 27,000 கி.மீ வேகத்திலும் பயணித்துக் கொண்டிருந்தது. விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
ஆறு முதல் 7 நிமிடங்களுக்கு டிராகன் விண்கலத்தில் என்ன நடக்கிறது, அது எங்கு இருக்கிறது என்று நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த எவருக்கும் தெரியவில்லை. 3.20 மணிக்கு, நாசாவின் WB57 எனும் கண்காணிப்பு விமானத்தின் கேமராக்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த டிராகன் விண்கலத்தைப் படம் பிடித்தன.அதன் பிறகே, நாசா கட்டுப்பாடு அறையில் இருந்தவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது. அடுத்த சில நிமிடங்களில் டிராகன் விண்கலத்துடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.பூமியை நோக்கி வரும் ஒவ்வொரு விண்கலமும், வளிமண்டல மறுநுழைவு எனும் ஆபத்தான செயல்முறையின் ஒரு பகுதியாக, சில நிமிடங்களுக்குக் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழக்கின்றன.
இந்த சில நிமிடங்கள் ‘Blackout time’ என அழைக்கப்படுகிறது. இதுவொரு பொதுவான நடைமுறைதான் என்றாலும், முக்கிய விண்வெளி விபத்துகள் இந்தச் சில நிமிடங்களில்தான் நடந்துள்ளன.
அதற்குக் காரணம், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் விண்கலத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் நிபுணர்கள் குழுவால் விண்வெளி வீரர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க முடியாது. அதேபோல விண்வெளி வீரர்களும் பூமியில் இருக்கும் குழுவுக்கு அவசரத் தகவல்களை அனுப்ப முடியாது.
ஒரு துயர உதாரணம், 2003இல் இந்திய வம்சாவளி வீரர் கல்பனா சாவ்லா உள்ளிட்ட நாசாவின் குழுவினர் 7 பேர் பயணித்த கொலம்பியா விண்கலம், பிளாக்அவுட் டைம் எனப்படும் இந்தச் சில நிமிடங்களில்தான் விபத்தைச் சந்தித்தது. அந்த விண்கலத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
