நிலத்தகராறு காரணமாக ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்

download-49.jpeg

நெல்லையில், நிலத்தகராறு காரணமாக ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கார்த்திக், அக்பர்ஷா என்ற இருவர் நெல்லை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தனர். கொலையுண்ட ஜாகிர் உசேன், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறி வெளியிட்ட பழைய வீடியோ வைரல் ஆகியுள்ளது.திருநெல்வேலி டவுன் தடி வீரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 60. இவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,. இவருக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் மற்றொருவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் தடிவீரன் கோவில் தெருவில் உள்ள மசூதி ஒன்றில் இன்று (மார்ச் 18) காலை தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாகிர் உசேனை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

தலை கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே ஜாகிர் உசேன் பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த திருநெல்வேலி மேற்கு மாவட்ட துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் அஜித்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்பட உயர் அதிகாரிகள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முன் விரோதமாக கொலை நடந்துள்ளது என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், கார்த்திக், அக்பர்ஷா என்ற இருவர் நெல்லை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தனர்.கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. தனக்கு கொலை மிரட்டல் வருவது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் வீடியோவில் கூறியுள்ளார். இப்படி முன் கூட்டியே வீடியோவில் புகார் அளித்த நிலையிலும், அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகிய இருவரும் தான், குற்றவாளிகளை ஊக்குவிப்பதாகவும் அவர் வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை:திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன் அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.

ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களை போலீசார் கண்டுகொள்வதில்லை. அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த கையாலாகாத தி.மு.க., அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *