பெண்களை டிரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் ஈரான்

download-8-19.jpeg

ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் ஈரான் உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க AI மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

ஐ.நா அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமுல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் பற்றி முறையிட காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.

மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அறநெறிப் பொலிசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *