இரான், துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம் – எர்துவானின் உண்மையான நோக்கம் என்ன சிரியாவில் பஷர் அல்-அசத் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது முதல் துருக்கி மற்றும் இரானின் நலன்கள் ஒன்றுக்கொன்று மோதும் எனக் கூறப்பட்டது.
அகமது அல்-ஷாரா தலைமையிலான ஆயுதக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், பஷர் அல்-அசத்தை அதிகாரத்தையும் சிரியாவையும் விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தியது. இந்தக் குழுவுக்கு துருக்கியின் ஆதரவு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிரியா சன்னி முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடு. பஷார் அல்-அசத், ஷியா முஸ்லிம்களின் அலவைட் சமூகத்தைச் சேர்ந்தவர். பஷர் அல்-அசத் 2000 முதல் 2024 வரை சிரியாவில் ஆட்சியில் இருந்தார்.
அசத் ஆட்சியில் இருந்த வரை இரான் சிரியா மீது ஆதிக்கம் செலுத்தியது. வெளிப்படையாக, இரான் ஒரு ஷியா முஸ்லிம் பெரும்பான்மை நாடாக அறியப்படுகிறது. மேலும் சிரியாவில் பஷர் அல்-அசத் அதிகாரத்தில் இருந்து விலகியது துருக்கியின் வெற்றியாகவும், இரானின் தோல்வியாகவும் பார்க்கப்பட்டது.சிரியாவில் இருந்து பஷர் அல்-அசத் வெளியேற்றப்பட்ட பிறகு, குர்திஷ் பிரிவினைவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் துருக்கி வெற்றி பெற்றதாகத் தெரிகிறது.அதைத் தொடர்ந்து, கடந்த மாதம்தான், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) நிறுவன உறுப்பினரான அப்துல்லா ஓகலான், தனது குழுவினரை ஆயுதங்களைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். அப்துல்லா ஒகலான் சிறையில் இருக்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளாக துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஒரு கொரில்லா போரை நடத்தி வருகிறது. ஒகலானின் இந்த வேண்டுகோள் எர்துவானுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
“ஆயுதங்களைக் கைவிடுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை ஏற்று உங்களது வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றுங்கள். அனைத்துக் குழுக்களும் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஓர் அமைப்பாக இருப்பதை நிறுத்த வேண்டும்” என்று தனது மேல்முறையீட்டில் ஒகலான் கூறினார்.
ஒகலானின் இந்த வேண்டுகோள் முழு மத்திய கிழக்குக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குர்துகள் இன்னும் சிரியாவின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் இராக் மற்றும் இரானிலும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ளனர்.
