பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற ரயிலை ஆயுதக்குழுவினர் தடுத்து நிறுத்தி, தாக்குதலில் ஈடுபட்டனர்.
குவெட்டா பகுதியிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தாங்கள் தாக்கியதாக, பலூச் விடுதலைப்படை (பி.எல்.ஏ) உறுதிப்படுத்தியுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக அந்தப் பிரிவினைவாத குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாக அக்குழு கூறியுள்ளது.ரயிலின் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் இந்தத் தாக்குதலில் காயமடைந்ததாக உள்ளூர் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலூசிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் உள்நாட்டு ஊடகமான ‘டான்’ ஊடகத்திடம், ரயிலில் “கடும் துப்பாக்கிச் சூடு” நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பல பயணிகளை பணயக் கைதிகளாகப் பிடித்துள்ளதாகவும், அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் “தீவிரமான விளைவுகள்” ஏற்படும் என்றும் பி.எல்.ஏ எச்சரித்துள்ளது.இருப்பினும், பணயக் கைதியாக யாராவது பிடிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இதுவரை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
குவெட்டா ரயில்வே துறை கட்டுப்பாட்டு அதிகாரி முகமது காஷிப் பிபிசியிடம் கூறுகையில், 400-450 பயணிகள் அந்த ரயிலில் பயணிக்கப் பதிவு செய்து இருந்ததாகவும் யாராவது பணயக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து எவ்வித உறுதியான தகவலும் சுயாதீனமாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
சிபி மாவட்ட எல்லையைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “மலைகள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் அந்த ரயில் நின்றுவிட்டதாக” ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மோசின் நவாஸ், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக வேண்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
ரயிலில் உள்ள எவரிடமும் அதிகாரிகள் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இணைய வசதியோ மொபைல் நெட்வொர்க் வசதியோ இல்லை என அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.பலூசிஸ்தான் மாகாணம் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். இயற்கை வளம் மிகுந்த இந்த மாகாணம், அதிக வளர்ச்சியடையாத பகுதியாகும்.
