தமிழ் தெரியாவிட்டால் அரசு வேலையை இழக்கணும்?: பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து மின்வாரிய பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத ஊழியரை, மீண்டும் வேலையில் அனுமதிக்கும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, ‘தமிழில் போதிய அறிவு பெற தவறினால், ஒருவர் அரசு பணியில் இருக்கும் உரிமையை இழக்க நேரிடுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விவகாரம்’ என, கருத்து தெரிவித்தனர்.தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர், மின்வாரியத்தில் இளநிலை உதவியாளராக, 2018ல் பணியில் சேர்ந்தார். பள்ளியில் தமிழ் படிக்கவில்லை எனில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தமிழ் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மின்வாரிய பணி விதிமுறை.
ஜெய்குமாரால், அத்தேர்வில் குறித்த காலத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதை ரத்து செய்து, பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிடக்கோரி, அவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
கடந்த, 2022ல் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் பெற்றோர் தமிழர்கள். அவரது தந்தை கடற்படை அதிகாரியாக இருந்தார். அவர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்ததால், மனுதாரரும் பிற மாநில பள்ளிகளில் படிக்க வேண்டியிருந்தது. அச்சூழலில் ஹிந்தியை இரண்டாம் மொழியாக படித்தார்.சம்பந்தப்பட்ட நபருக்கு தமிழில் போதிய அறிவு இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. போடியில் பிறந்து, மின்வாரியத்தில் பணிபுரிந்த மனுதாரர், தமிழில் போதிய அறிவு பெற்றிருப்பார். இம்மண்ணின் பக்கா தமிழனாக இருக்கும் மனுதாரரை துாக்கி எறிவது சரியல்ல.
மனுதாரர், 2022 ஜூனில் நடந்த தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பது உண்மை. அவரை மீண்டும் பணியில் சேர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து வரன்முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, தமிழக மின்வாரிய தலைவர், தலைமை பொறியாளர் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு நேற்று அளித்த உத்தரவு: தமிழகத்தில் தமிழில் புலமை இல்லாத ஒருவரை அரசு பணியில் நியமனம் செய்வது தொடர்பான பிரச்னை இது.
தமிழில் போதிய அறிவு பெற தவறினால், ஒருவர் அரசு பணியில் இருக்கும் உரிமையை இழக்க நேரிடுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விவகாரம். தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, விசாரணை ஏப்., 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
