லண்டனில் முதல் சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர், முதல் தமிழர் என்ற பெருமையுடன் சென்னைக்கு இன்று திரும்பும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆசியாவிலேயே சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் இளையராஜாதான்.இசை உலகிற்கு
ஏராளமான சாதனைகளை செய்துள்ள இளையராஜா மற்றொரு சாதனையான சிம்பொனியை தனது கனவாகவே கருதி வந்தார். அந்த வகையில் அவர் 35 நாட்களில் சிம்பொனியை எழுதி முடித்து அதற்கு வேலியண்ட் என பெயரிட்டிருந்தார்.இந்த சிம்பொனியை உலகின் சிறந்த இசைக் குழுவினரான ராயல் பிலார்மோனிக் இசைக் குழுவினருடன் இந்திய நேரப்படி நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். ஈவென்டிம் அப்பல்லோ எனும் அரங்கில் அவர் சிம்பொனியை
அரங்கேற்றியதை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.சிம்பொனி என்பது ஒரே நேரத்தில் பலவிதமான இசைக் கருவிகளை இசைப்பதுதான். இதனால் ஒவ்வொரு இசைக் கலைஞர்களுக்கும் இளையராஜா தனித்தனி குறிப்புகளை கொடுக்க வேண்டும். இதுதான் இந்த சிம்பொனியில் உள்ள சிரமமே! நேற்று முன் தினம் சுமார் ஒன்றரை மணி நேரம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதில் 45 நிமிடங்கள் சிம்பொனி
இசைக்கப்பட்டது. சிம்பொனி இசையை மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் அரங்கேற்றியிருந்தனர்.லண்டனில் சாதனை படைத்த இளையராஜா இன்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
