தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.இன்றைய தேதியில் தங்கம்தான் எல்லாம் என்று மாறியிருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால், நமது மாநிலத்தின் வளர்ச்சி
மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.நேற்று இந்திய புவிவயில் ஆய்வு மையத்தின் 175ம் ஆண்டு நிறுவன தினம் சென்னை கிண்டியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தங்கம் குறித்து கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “இந்திய நிலப்பரப்பு குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அதை மத்திய அரசுக்கு அறிக்கையாக கொடுத்து வருகிறோம். இதில் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகள் முக்கியமானது. தமிழ்நாட்டை பொருத்தவரை சென்னையில் நிலநடுக்கம்
ஏற்படுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை வங்கக்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. சென்னைக்கு அடியில் கருங்கல் பாறைகள்தான் அதிகம் இருக்கிறது. எனவே, நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும் கடற்கரை ஓரத்தில் பல அடுக்குகளை கொண்ட கட்டிடங்களை கட்ட வேண்டாம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நிலநடுக்கம் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இது எந்த அளவுக்கு வெளிப்படுகிறது? என்பதை வைத்துதான் அதன் தீவிரம் இருக்கும். நிலநடுக்கம் குறித்தும் பல்வேறு
முன்னெச்சரிக்கைகளை நாங்கள் அரசுக்கு கொடுத்து வருகிறோம்.அதேபோல தமிழக நிலப்பரப்பை பொறுத்தவரை இங்கு சுண்ணாம்பு பாறைகள் அதிகம். ஆனால் திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இது குறித்து கூடுதல் ஆய்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தங்கம் தவிர, லித்தியம் அதிகம் இருக்கிறது. இதை வைத்து பேட்டரிகள் தயாரிக்க முடியும். இவையெல்லாம் குறித்து தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் பல விஷயங்கள் தெரிய வரும்” என்று கூறியுள்ளார். இந்த தகவல் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஜாக்பாட். சர்வதேச
வணிகத்தை தீர்மானிப்பதில் தங்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மட்டுமல்லாது பொருளாதார, தொழில்துறை, பணப்புழக்கம் மற்றும் கலாச்சாரம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் தங்கம் முக்கிய பங்காற்றுகிறது. கர்நாடகாவிலும், ஆந்திராவிலும்தான் தற்போது தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அறிவிப்பின் மூலம் இனி வரும் நாட்களில் தமிழகத்திலும் தங்கம் தோண்டி எடுக்கப்படலாம். இது தவிர, இரண்டாவது தங்கமாக லித்தியம் இருக்கிறது. உலகமே இன்று மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்த வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரியை உற்பத்தி செய்ய லித்தியம் அவசியம். தமிழகத்தில் லித்தியம் அதிகமாக இருப்பதால் சர்வதேச முதலீடுகளை நம்மால் அதிகம் ஈர்க்க முடியும். லித்தியத்தை சரியாக பயன்படுத்தினால் சீனாவுக்கே நம்மால் சவால் விட முடியும்.