குர்தீஷ் பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததால், துருக்கியில் 40 ஆண்டு கால வன்முறை முடிவுக்கு வருகிறது.மேற்கு ஆசிய நாடான துருக்கியின் அதிபராக ரிகெப் டய்யீப் எர்டோகன் பதவி வகிக்கிறார்.
இங்கு குர்தீஷ் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே., என கூறிக் கொள்ளும் குர்தீஷ் பயங்கரவாதிகள், 1984ல் இருந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இதன் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் இருக்கிறார். எனினும் குர்தீஷ் பயங்கரவாதிகள், வன்முறையை தொடருகின்றனர்.அமைதி ஒப்பந்தங்கள் பயனற்றுப் போன நிலையில், சிறையில் இருக்கும் அப்துல்லாவை சமீபத்தில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடும்படி கோரினர். இந்த நிலையில், ஆயுதங்களை கைவிடுவதாக குர்தீஷ் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.
அவர்கள் நடத்தும் ‘பைராட் நியுஸ் ஏஜன்சி’ வாயிலாக வெளியிட்ட அறிக்கையில், ‘அமைதி மற்றும் ஜனநாயக சமூகத்தை அமைக்கும் நோக்கில், அப்துல்லா ஓக்லான் உத்தரவுப்படி, உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
‘குர்தீஷ் அமைப்பைச் சேர்ந்த யாரும் ஆயுத தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். துருக்கி, ஈராக், ஈரான், சிரியாவை உள்ளடக்கிய குர்தீஷ் பிராந்தியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வரலாறு எழுதப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
துருக்கியில் அதிபர் எர்டோகன் பதவிக்காலம் 2028ல் முடிகிறது. அதன் பிறகும் பதவியில் தொடரும் வகையில் சட்டத்தை திருத்த குர்தீஷ் ஆதரவு தேவைப்படுவதால், அவரது முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், சிரியாவில் அதிபராக இருந்த பஷிர் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு, லெபனானில் ஹெஸ்பெல்லா பயங்கரவாதிகள் பலவீனமானது போன்ற காரணங்களும், குர்தீஷ் பயங்கரவாதிகளின் முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
