நியூயார்க் உக்ரைனின் இறையாண்மை, நில உரிமை தொடர்பாக ஐ.நா., சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், தன் நிலைப்பாட்டை மாற்றி, ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஓட்டளித்தது. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைத் தாண்டியுள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு இருந்து வந்தது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அதன் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் உள்ளார். மேலும், போர் நிறுத்தப் பேச்சுகளில் உக்ரைனுக்கு அவர் அழைப்பும் விடுக்கவில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சியின்போது, உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ மற்றும் நிதி உதவிகளையும் அவர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா., பொது சபையில், உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு ஐரோப்பிய நாடுகள் இணைந்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளன. உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் நில உரிமையில் ஆதரவாக இருப்போம் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.
ஐ.நா., பொது சபையில் இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில், ரஷ்யாவுக்கு ஆதரவாக, தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா ஓட்டளித்தது.
