மஹா சிவராத்திரி விரதம் பற்றிய தகவல்கள்.

40842075-lord-shiva-and-parvati.jpg

மஹா சிவராத்திரி விரதம்
பற்றிய தகவல்கள்.
நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை நமது திருவாசகத்தேன் ஆன்மீக குழுவின் மூலம் சுருக்கமாகப் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி, அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. சிவராத்திரி தினத்தில் முழு விரதம் இருந்து வழிபடக் கூடிய உன்னதமான நாள்.
இந்தாண்டு பிப்ரவரி 26 அன்று மஹாசிவராத்திரி வருகிறது. அன்றைய தினம் நாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என்றால், சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்.

நித்திய பூஜை செய்பவர்கள் அதை செய்யலாம், சாதாரணமாக கடவுள் படங்கள் வைத்து வழிபடுபவர்கள் அந்த வழிபாட்டை செய்யலாம்.
காலையில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு டம்ளர் பால் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவன் பாடல்கள் என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் படிக்கலாம். அதோடு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.
அன்றைய தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருந்து இரவில் கண் விழிக்க வேண்டும்.
அப்படி முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது, உடல்நல பிரச்னை உள்ளது, கர்ப்பிணிகள் பழத்தைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
உணவு எடுக்காமல் இருக்க முடியாது என்பவர்கள் முடிந்த வரை அன்றைய ஒருநாளாவது நாம் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பழங்கள், அவல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.

சிவ ராத்திரி தினத்தில் நாம் வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் வீட்டில் சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோயிலுக்கு சென்று அங்கு சிவலிங்க செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.
மஹா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது நல்லது. இது முன் வினையையும், இந்த பிறப்பின் வினையையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தது. சிவனின் துதியும், சிவ ஆராதனையும் அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.
சிவராத்திரி தினத்தில் இரவில் தான் மிகுந்த விஷேசம். மாலை நாம் நம் பூஜை அறையில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.
அங்கு சிவனின் நாமத்தை சொல்லி வழிபடுவது அவசியம். குறைந்தபட்சம் அன்று இரவு 1 மணி வரையாவது நாம் கண் விழித்து சிவனை வழிபட வேண்டியது அவசியம்.

சிவராத்திரி அன்று அதிகாலை 4 மணிக்கு தான் கால பூஜைகள் நிறைவு பெறும். அதன் பின்னர் அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை நாம் வாங்கிக் கொண்டு நாம் நம் விரதத்தை நிறைவு செய்யலாம்.
அதுவரை கோயிலுக்கு வெளியில் சிலர் அன்னதானமாக கொடுக்கும் உணவை எடுத்துக்கொண்டால் உங்களின் விரதம் கலைந்துவிடும். அதனால் அதிகாலை 4 மணிக்கு கால பூஜை நிறைவு பெற்ற பின்னரே பிரசாதத்தை சாப்பிட வேண்டும். அல்லது வீட்டிற்கு வந்து ஏதேனும் ஒரு சாதத்தை செய்து அதை கோயிலுக்கு சென்று, அங்கு சிவனை தரிசித்து வரும் சிவ பக்தர்களுக்கு வழங்கலாம். நாமும் சாப்பிடலாம். இப்படி செய்ய சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
செய்யக் கூடாத முக்கிய விஷயம்:

சிவ ராத்திரிக்கு மறுநாள் பொழுதிலும் நாம் உறங்கக் கூடாது. நாம் உணவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உறங்குவது தவறு. அன்று மாலை நாம் பூஜை அறையில் தீபமேற்றி வழிபட்டு, இரவு 8 மணிக்கு உறங்கலாம்.
சிவ ராத்திரி தினத்தில் கோயிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கண் விழித்திருக்கத் திரைப்படம் பார்த்தல், விளையாடுவதாக இருந்தால், நாம் சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பதிலாக சும்மாவே இருந்துவிடலாம்.
சிவராத்திரியில் படிக்க வேண்டியவை
நாம் இரவில் வீட்டிலேயே இருக்க விரும்பினால், சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்து வழிபாடு செய்து, தேவாரம், திருவாசகம், சிவ புராணம், பெரிய புராணம், உள்ளிட்ட சிவன் பாடல்கள் படிக்கலாம். எதுவுமே தெரியாது என்றால் நாம் ஓம் நமச்சிவாய, சிவாய நமஹ என்ற சிவ மந்திரத்தையாவது நாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

படித்தாலும் தூக்கம் வருகிறது என்றால், சிவாய நமஹ,ஓம் நமச்சிவாய என எழுதுங்கள்.
மஹா சிவராத்திரி விரத பலன்கள்:
மேற்கூறியவாறு சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால், வாழ்வில் செல்வ, ஞானம், புகழ், நாம் எண்ணிய உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் சிறப்பான வளர்ச்சி என அனைத்து வகையான செல்வங்களையும் நாம் பெறலாம்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *