தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த 67 படகுகளை ஏலம்விட இலங்கை முடிவு – இன்றைய முக்கிய செய்திகள் தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் இன்று (23/02/2025) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
அந்த செய்தியின்படி, 2020-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2-வது முறையாக ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, ராமேசுவரம் மீனவர்களின் 31 படகுகள், புதுக்கோட்டை மீனவர்களின் 14 படகுகள், கன்னியாகுமரி மீனவர்களின் 8 படகுகள், நாகை மீனவர்களின் 3 படகுகள், காரைக்கால் மீனவர்களின் 5 படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விட உள்ளதாக இலங்கை நீரியல் வளத் துறை தெரிவித்துள்ளது.
