அதானி மீதான குற்றச்சாட்டுப் பதிவு.. அமெரிக்க எம்பிக்கள் கடிதம்.. ட்ரம்ப் அதிரடி உத்தரவு
வெளிநாட்டு லஞ்ச முறைகேடுகள் குறித்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதித்துறைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக அதானிக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை அமெரிக்காவில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்திய தொழிலதிபர் அதானி மீது முந்தைய பைடன் அரசு பதிவு செய்த குற்றச்சாட்டுகள் விவேகமற்ற நடவடிக்கை என 6 அமெரிக்க எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் ட்ரம்ப் அரசில் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பாம் போன்டி (PAMBONDI)க்கு கடிதம் எழுப்பியுள்ளனர். இருநாட்டு நட்புறவு அரசியலை தாண்டி வணிகம், பாதுகாப்பு என நீளும் நிலையில் பைடன் அரசின் விவேகமற்ற இம்முடிவு தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டங்கள் தொடர்பான
�
ஒப்பந்தங்களைப் பெற அதானி, பல்வேறு மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் இதை மறைத்து அவர் அமெரிக்காவில் நிதி திரட்டியதாகவும் சில மாதங்களுக்கு முன் இருந்த பைடன் அரசில் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது தற்போது அமெரிக்காவில் அரசு மாறியுள்ள நிலையில் அதானிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு லஞ்ச முறைகேடுகள் குறித்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதித்துறைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ்தான் அதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் உத்தரவால் அதானிக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை அமெரிக்காவில் தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை தொடங்க உள்ள நிலையிலும் எம்.பி.க்களின் கடிதமும் அதைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் உத்தரவும் முக்கியத்துவம் பெறுகிறது.
